மோட்டோரோலா நிறுவனம் பிளிப்கார்ட் வழியாக அதன் புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே...
மோட்டோரோலா நிறுவனம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவிகளை வெளியிடத் தயாராக உள்ளது, இந்த பிராண்ட் தனது புதிய டிவி மாடல்களின் விற்பனைக்காக பிரபல இகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இதுவொரு டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்வாக நடக்கும், மற்றும் இது பிளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஸ்மார்ட் டிவிகளின் முக்கிய விவரக்குறிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், இந்த டிவிக்கள் அதன் சமீபத்திய குவாட் கோர் மீடியாடெக் எம்டி 9602 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்று மீடியாடெக் வெளிப்படுத்தியுள்ளது, இதில் ஆர்ம் கார்டெக்ஸ்-ஏ 53 சிபியு 1.5 ஜிஹெர்ட்ஸ் மற்றும் ஆர்ம் மாலி-ஜி 52 எம்சி 1 ஆகியவைகளும் அடக்கம்.
மோட்டோரோலா தற்போது 32 இன்ச், 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச், மற்றும் 75 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை சந்தையில் கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
"மீடியா டெக்கின் புதுமையான எம்டி 9602 சிப் உடன் இயங்கும் புதிய அளவிலான மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகளை சந்தைக்குக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - இது நாட்டின் மிகவும் போட்டி நிறைந்த ஸ்மார்ட் டிவிகளில் ஒன்றாகும்."
"இந்த சிப் மூலம், இந்திய நுகர்வோர் இதன் நன்மைகளை அனுபவிக்க முடியும். 4K மற்றும் HD / FHD வரம்புகளில் கிடைக்கும் உயர்ந்த மற்றும் மேம்பட்ட விவரக்குறிப்புகளானது முதல் முறையாக அவர்களுக்கான சரியான பண்டிகை கால மகிழ்ச்சியை அளிக்கும் ”என்று பிளிப்கார்ட் தனியார் பிராண்டுகளின் துணைத் தலைவர் ஆன தேவ் ஐயர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் புதிய மோட்டோரோலா டிவிகளில் எச்டி, ஃபுல் எச்டி மற்றும் 4 கே டிவி மாடல்கள் இருக்கும் என்பதையும் இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. இந்த டிவிகள் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தால் இயங்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் டிவிகள் என்றும் கூறப்படுகிறது.
மீடியா டெக்கின் புதிய சிப், நிகழ்நேர வீடியோ தேர்வுமுறை மூலம் சிறந்த படம் மற்றும் ஆடியோ-வீடியோ தரத்தை வழங்க AI-PQ (பட தரம்) மற்றும் AI-AQ (ஆடியோ தரம்) தொழில்நுட்பத்துடன் வரும் என்று மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ப்ராசஸர் உள்ளமைக்கப்பட்ட AI வாய்ஸ் தொழில்நுட்ப ஆதரவையும் கொண்டுள்ளது, இது வாய்ஸ் அசிஸ்டென்ட் உடன் சிறந்த இணக்கத்தை ஏற்படுத்தும். MT9602 ஆனது HDMI 2.1a போர்ட்கள், யூ.எஸ்.பி 2.0 ஆதரவு, மற்றும் HDCP 2.2 உடன் HDMI 2.0 / 1.4 ஆகியவற்றுடன் வருகிறது. இது டால்பி அட்மோஸ் சரவுண்ட் ஆதரவையும் கொண்டுள்ளது.
சிறந்த காட்சிகளுக்காக, இது HDR 10+ இன் விருப்பங்களை உள்ளடக்கிய அனைத்து அடிப்படை HDR தரங்களுக்குமான ஆதரவைக் கொண்டுள்ளது. வீடியோ ஸ்ட்ரீமிங்கிற்கான ஏ.வி 1 மற்றும் ஏ.வி.எஸ் 2 போன்ற கோடெக் தரநிலைகளுக்கும் இந்த ப்ராசஸர் ஆதரவு அளிக்கிறது.
Post a Comment